திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் நேற்று போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற கார், போலீசை கண்டதும் நிறுத்தாமல் வேகமாக சென்றன. சந்தேகம் அடைந்த போலீசார், காரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். அப்போது, காரில் இருந்து கீழே இறங்கிய நபர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனே, அந்த நபரையும் விரட்டிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வேட்டவலம் அடுத்த ஆண்டியாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ்(25) என்பதும், நாயுடுமங்கலம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும், அவரது காரில் 100 கிலோ பான்மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்காக கொண்டுசெல்வது தெரிந்தது. அதைத் தொடர்ந்து, நாயுடுமங்கலம் கிராமத்தில் உள்ள ஜெகதீஷ் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு நிறுத்தியிருந்த மற்றொரு காரில், 100 கிலோ பான்மசாலா பாக்கெட்டுகள் பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, 200 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் ஆகியவற்றையும், இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசர் வழக்குப்பதிந்து, ஜெகதீஷை கைது செய்தனர். பின்னர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஜெகதீஷ் கொடுத்த தகவலின் பேரில், குட்கா பொருட்களை சப்ளை செய்யும் முக்கிய நபர்கள் 2 பேரை தேடும் பணியில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குட்கா கடத்திய காரை சினிமா பாணியில் போலீசார் விரட்டி மடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.