மாதந்தோறும் பௌர்மணி கிரிவலத்துக்குப் பிறகு அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுகிறது அதன்படி, புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் கடந்த 16-ம் தேதி இரவு 8 மணிக்குத் தொடங்கி, 17-ம் தேதி மாலை 5.38 மணிக்கு முடிவுற்றது. கடைசியாக, கடந்த செப்டம்பர் 26-ம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. அந்த மாத காணிக்கை தொகை 3,05,96,085 ரூபாய் ஆகும். இந்த நிலையில், செப்டம்பர் 26-ம் தேதிக்குப் பிறகான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி திருஅண்ணாமலையார் கோயிலின் 3-வது பிரகாரத்திலுள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கின.
கோயில் இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் இணைந்து காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கைகளை எண்ணி முடிக்க இரவு 8.30 மணி ஆனது. கோயில் உண்டியலில் மொத்தமாக 2,71,28,086 ரூபாய் காணிக்கைப் பணம் இருந்தன. மேலும் 110 கிராம் தங்கம் மற்றும் 1,150 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். இதைத்தொடர்ந்து, காணிக்கைத் தொகை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டன.