கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக 100 கன அடி தண்ணீர் வீதம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராயபாளையம் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. கல்வராயன் மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, இந்த அணை நிரம்பியுள்ளது. மொத்தக் கொள்ளளவான 46 அடியில் 44 அடி வரை தண்ணீரை நிலையாக தேக்கப்பட்டு, அணைக்கு வரக்கூடிய உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதின் பேரில், அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் இணைந்து, அணை தலைப்பு மதகு வழியாக தண்ணீரைத் திறந்து விட்டு, வாய்க்கால் வழியாக சென்ற தண்ணீரில் மலர் தூவி வரவேற்றனர்.
தலைப்பு மதகு வழியாக இன்று முதல் 29 நாட்களுக்கு சுமார் 100 கன அடி வீதம் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், பாசன விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.