திருவாரூரில் இந்திய பள்ளி உளவியல் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் ( ஐசிஎஸ்எஸ்ஆர்) நிதியுதவியுடன் நடைபெறும் இந்த கருத்தரங்கு வரும் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பல்வேறு சமூக – பொருளாதார மொழி மற்றும் பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களின் மனோ – சமூக சவால்களை குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது.
இந்த கருத்தரங்கை மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தொடங்கி வைத்தார். மனநல விழிப்புணர்வு மற்றும் உள்ளடக்கிய கல்வி நடைமுறைகளை நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் பல்கலைக்கழகம் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகளை அமைச்சர் பாராட்டினார். 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மத்திய அரசின் சாதனைகளை அமைச்சர் மேற்கோள் காட்டினார்.
2013ம் ஆண்டில் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்த இந்தியா 2024 ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்தில் உள்ளது எனவும், 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தை அடைய நாம் முன்னேறி வருகிறோம் என தெரிவித்தார். கல்வித்துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த அவர், எய்ம்ஸ் மருத்துவமனையில் எண்ணிக்கையை 23 ஆக உயர்த்தி உள்ளதாவும், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வியும் கல்வித்துறையில் உள் கட்டமைப்புகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருவதாக கூறினார்.
மேலும் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் பள்ளி உளவியல் மூலம் ஒருங்கிணைந்த கல்வி சூழலை உறுதி செய்வதற்கான முக்கியப்படியாக இந்த கருத்தரங்கம் திகழ்வதாக மத்திய அமைச்சர் பாராட்டினார். தொடர்ந்து சிறப்புரையாற்றிய மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன், மாணவர்களை உணர்வு பூர்வமாகவும் கல்வியில் சிறந்து விளங்கவும் பள்ளி உளவியலாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆசிரியர்கள் இரு பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர் என தெரிவித்தார்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது போல அவர்களின் மன ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்ற உலகில் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கருத்தரங்கு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மூன்று நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் கருணாநிதி, அராப் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் வேல் எம். எஃப் அபுகாசன், தாய்லாந்தில் உள்ள அசம்ப்சன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பார்வதி வர்மா ஆகியோர், மாணவர்களின் மன ஆரோக்கியம், பள்ளி உளவியலில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் நிபுணர்கள் தங்களது அனுபவம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை பகிர்ந்துள்ளனர்.
விழாவில் பேராசிரியர் வித்யா வரவேற்புரையும், பேராசிரியர் சீனிவாசன் நன்றியுரையும் வழங்கினார்.இவ்விழாவில் பதிவாளர் திருமுருகன், நிதி அலுவலர் கிரிதரன் தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர், நூலகர் பரமேஸ்வரன் மற்றும் மூத்த பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.