சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 4 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், கொளத்தூர் மற்றும் மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி முன்னிலையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாம்களில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அப்போது அவர், சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
அந்தவகையில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று குறைகளுக்கு தீர்வுகாண ஏதுவாக நேற்றைய தினம் சேலம் மாவட்டம், கொளத்தூரிலும், மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் மூலம் சங்ககிரியில் 449 மனுக்களும், எடப்பாடியில் 1,396 மனுக்களும், கொங்கணாபுரத்தில் 309 மனுக்களும், மகுடஞ்சாவடியில் 319 மனுக்களும், இடங்கணசாலையில் 423 மனுக்களும் என மொத்தம் 2,896 மனுக்கள் பெறப்பட்டு தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சுற்றுலாத்துறை அமைச்சர் அம்முகாம்களில் அரசு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 4 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு தகுதியான அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. குறிப்பாக, இலவச வீட்டுமனைப் பட்டாவானது நத்தம் புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வரும் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கி வருகிறோம்.
அதேபோன்று ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இம்முகாமில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.