கடந்த 3 நாட்களாக நடந்த சோதனையில் பிஎஸ்கே குழும நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள டூமிங்குப்பம் பகுதியில் பிஎஸ்கே குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள், 2023-24ம் நிதியாண்டிற்கான மொத்த வருவாய், நிகர லாபம் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக அதிமுக நிர்வாகியான இளங்கோவன் தொடர்பான நிறுவனங்களில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் தொடர்பாகவும், கட்டுமான பணிகள் மேற்கொண்டது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடியின் நண்பரான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான சென்னையில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிஎஸ்கே குழுமம் இயங்கி வருகிறது. இது, அதிமுக ஆதரவாளரான தொழிலதிபர் பெரியசாமிக்கு சொந்தமான நிறுவனம். தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை முக்கிய ஒப்பந்ததாரராக இந்த குழுமம் உள்ளது.
அதேநேரம் அதிமுக ஆட்சியின் போது பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் தான் அரசு கட்டுமானப்பணிக்கான முதன்மை ஒப்பந்ததாரராக செயல்பட்டது. இந்த குழுமம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் பல நூறு கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து கடந்த 2019 ஏப்ரல் மாதம் பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகள், கட்டுமான நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.112 கோடி வரை வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ.14 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனுக்கு சொந்தமான திருச்சி எம்.புதுப்பட்டியில் உள்ள எம்ஐடி கல்லூரி, பாலிடெக்னிக், பள்ளிகள், முசிறியில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரியில் கடந்த 22ம் தேதி முதல் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதேபோல், கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட், அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், ப்ளூ மவுண்ட் பேப்பர் பிரைவேட் லிமிடேட், ஆகியவற்றின் அலுவலகங்களிலும் 3வது நாளாக சோதனை நடந்தது. இங்கும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பிஎஸ்கே குழுமத்தின் மற்ற நிறுவனங்களிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.