மருத்துவத்திற்கு 8 கி.மீ. செல்லும் நோயாளிகள்
திருக்கோவிலூர் அருகே திம்மச்சூர் மக்கள் மருத்துவத்திற்காக 8 கி.மீ. செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த திம்மச்சூர் ஊராட்சியில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கட்டிய துணை சுகாதார நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் துணை சுகாதார நிலையத்தின் செவிலியர் தங்குவதற்குக்கூட போதுமான நிலையில் இடம் இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு அருகில் உள்ள பாடியந்தல், கோளாபாறை ஊராட்சிகளை சேர்ந்த நோயாளிகள் மற்றும் கர்பிணி பெண்கள் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எடையூர் மற்றும் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜி.அரியூர் ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்கின்றனர்.சிறிய தலைவலிக்குக்கூட நீண்ட தூரம் சென்று மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.