திண்டிவனம் அருகே தொடர்ந்து மூன்று தினங்களாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் நகரப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அவ்வையார்குப்பம் கிராமத்தில் தொடர்ந்து மூன்று தினங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து இதே போன்று இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகமானது சரிவர ஊராட்சி நிர்வாகம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை அவ்வையார்குப்பத்திற்கு வந்த நகரப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உறுதியளித்தன் பேரில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட கிராமத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.