காவிரிக்கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியை திருவாரூர் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக பகுதியில் பனை விதைகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகள் உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 1000 பனை விதைகள் வீதம் நான்கரை இலட்சம் பனை விதைகள் விதைக்கப்படும். காவிரிக்கரையில் பனை விதைகள் விதைக்கும் பணி நிறைவுற்று இன்று தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணியில் வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, சிப்காட், கிரீன் நீடா அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு ஒருங்கிணைத்து ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்களும் பனை விதைகள் நடும் பணியை சேவையாக செய்திட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நம் மாநில மரமான பனையை நம் பகுதி முழுவதும் விதைக்க வேண்டும். சல்லி வேர்களைக் கொண்ட பனை மரங்கள்தான் மழை நீரை நிலத்தின் ஆழத்திற்கு கொண்டு சென்று நிலத்தடி நீரை சேமிக்கிறது. பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக இருக்கிறது. வருங்கால சந்ததியினரை காக்க வல்ல பனையை வளர்க்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.
விழாவில் மத்திய பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.திருமுருகன், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் மீனாட்சிசூரிய பிரகாஷ், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, வனச்சரக அலுவலர்கள் எம்.சைதானி, சரவணக்குமார், பெரும்புகலூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.