திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடைச் செய்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமையில் நடந்தது.
வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொள்ளும் பொழுது பள்ளி வளாகங்களுக்கு அருகாமையில் உள்ள விற்பனை கடைகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யப்பட்டதார். வட்டாட்சியர்கள் அலுவல் பணியின் காரணமாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பொழுது, மது ஒழிப்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகங்களுக்கு அருகாமையில் உள்ள விற்பனை கடைகளில் புகையிலை, சிகரெட், கஞ்சா, கூலிப் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, உணவு பாதுகாப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைச் சார்ந்த அலுவலர்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில்; வட்டாட்சியர்கள் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கும்;பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்ட விவரத்தினை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் எனவும், மண் அள்ளப்பட்ட பிறகு நீர்நிலைகளில் ஏற்படும் பள்ளத்தினை உடனடியாக சமன்படுத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், வட்டாட்சியர்கள்; ஒவ்வொரு கிராமங்கள் வாரியாக தங்களுக்கு வரப்பெற்ற நிலம் பாகப்பிரிவினை பிரச்சனைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்புடைய நீண்ட கால நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, அவற்றின் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் எனவும்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் பொழுது, அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடைகளில் தீயணைப்பான் கருவி, மணல் மூட்டைகள், தண்ணீர் தொட்டி, அவசர காலத்தில் வெளியே செல்லுவதற்கான வழி மற்றும் காற்றோட்டமான இருப்பு அறை உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்புகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன், வருவாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), உதவி ஆணையர் (கலால்) செந்தில் குமார், காவல்துறை மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.