பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) சேவைக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) சேவையின் பலனை அனுபவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய தகவல் இந்திய மக்களை குஷியடைய செய்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் 5ஜி சேவைக்கான தொடக்க தேதியை இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இதனால், பிஎஸ்என்எல் 5ஜி எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்குமென்ற உறுதியான காலம் இப்போது தெரியவந்துள்ளது.
அக்டோபர் 14 திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவைக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் நெட்வொர்க் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆயிரக்கணக்கான மொபைல் டவர்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுமையாக பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் கூறிய தகவலின் படி, BSNL நிறுவனம் வரும் ஜூன், 2025 காலவறைக்குள் அதன் சொந்த பிஎஸ்என்எல் 5G நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். யுஎஸ்-இந்தியா வியூகக் கூட்டாண்மை மன்றம் ITUWTSA நிகழ்வில் பேசிய அவர், 4G-யில் உலகத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்தியாவும் முன்னேறி வருவதாக கூறினார். அதேபோல், 5G இல் இந்தியா உலகளாவிய முன்னேற்றங்களை கண்டுள்ளது என்று கூறினார்.
எதிர்கால திட்டங்களில், மற்ற நாடுகளை விட வேகமாக இந்தியா அதன் 6G நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் வேறு எந்த மூலத்திலிருந்தும் உபகரணங்களைப் பயன்படுத்தாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவான உத்தரவை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் சிந்தியா எடுத்துரைத்தார்.
வெற்றிகரமாக, இந்தியாவில் 1 லட்சம் பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள் நிறுவப்பட்ட வேகத்தில், பிஎஸ்என்எல் அதன் சொந்த பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அறிமுகம் செய்யுமென்று கூறியுள்ளார். இது ஜூன் 2025க்குள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு 4ஜி இல் இருந்து அதே டவரில் 5ஜி வழங்கும் உலகின் ஆறாவது நாடாக நாம் இருப்போம் என்றும் அவர் கலந்தாய்வில் தெரிவித்திருக்கிரார்.