வடகிழக்கு பருவமழையால் மத்திய வங்கக்கடலில் உருவாகும், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கனமழை பெய்தது. பெருநகரங்கள் மழைநீர் தேங்கி நீரில் மூழ்கின. இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் முதல் பெய்யத் தொடங்கி நான்கு நாட்களுக்கு மேலாகக் கனமழை பெய்து வந்தது.
மேலும், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன்பின் கடந்த இரண்டு நாட்கள் இயல்பான நிலை நீடித்து வெயில் அடிக்க தொடங்கியது. இந்நிலையில், வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி, அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் வாரத்தில் நான்கு நாட்கள் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.