திருவண்ணாமலை மாநகராட்சியில் புதிய நியாய விலைக்கடை கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்தார்கள்.
திருவண்ணாமலை ஒன்றியத்தில் செயல்படும், திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் 82 முழுநேர கூட்டுறவு நியாயவிலைக் கடைகளும், 07 பகுதிநேர கூட்டுறவு நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 89 கூட்டுறவு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் திருவண்ணாமலை மாநகராட்சி கற்பகம் நியாய விலைக் கடை எண்.42-க்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சொந்த கட்டடம் கட்டப்பட்டு இன்றையதினம் கற்பகம் நியாய விலைக்கடை எண்.42-ன் புதிய கட்டடம் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் மற்றும் குடும்ப அட்டைகளை வழங்கினார்கள்.
மேற்கண்ட நியாய விலைக்கடையில் 667 அரிசி குடும்ப அட்டைகளும், 11 சர்க்கரை குடும்ப அட்டைகளும் 47 யுயுலு அரிசி குடும்ப அட்டைகளும் 01 ழுயுP அரிசி குடும்ப அட்டைகளும் 01 யுP அரிசி குடும்ப அட்டைகளும் 06 காவலர் குடும்ப அட்டைகளும் 01 கௌரவ குடும்ப அட்டைகளும் என மொத்தம் 734 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் மரு. எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா கார்த்திக்வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சி, சந்தைமேடு பெரும்பாக்கம் சாலையில் நமக்கு நாமே திட்டம் 2023 -24 மூலம் ரூபாய் 16.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடை எண்: 43 என்ற புதிய கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் மற்றும் குடும்ப அட்டைகளை வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை ஒன்றியத்தில் செயல்படும் எச்.எச்.464. காட்டாம்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுபாட்டில் இயங்கும் 3 முழு நேர நியாயவிலைகடைகளும் 3 பகுதிநேர நியாயவிலைகடைகளும் என மொத்தம் 6 கூட்டுறவு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் பாவுப்பட்டு காலணி பகுதியில் புதிய பகுதிநேர நியாயவிலைக்கடையினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
மேற்கண்ட நியாயவிலைக் கடையில் 319 அரிசி குடும்ப அட்டைகளும் 55 யுயுலு அரிசி குடும்ப அட்டைகளும் என மொத்தம் 374 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் பாவுப்பட்டு காலணிக்கு 230 குடும்ப அட்டைகள் தற்போது நடைமுறையில் உள்ளது.
புதிய நியாய விலைக்கடைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பேசியதாவது :
நமக்கு நாமே திட்டம் என்பது அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இணைந்து நடத்துகின்ற திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய நியாய விலைக்கடையினை கட்டி வழங்கியது பாராட்டத்தக்கது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 1127 முழுநேர கூட்டுறவு நியாயவிலைக் கடைகளும் 552 பகுதிநேர கூட்டுறவு நியாயவிலைக் கடைகளும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 8 கூட்டுறவு நியாய விலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 3 அமுதம் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1679 கூட்டுறவு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொது விநியோகத்திட்டம் என்பது மிக முக்கியமான ஒன்று.
பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருந்த இடைவெளியை தவிர்க்கும் வகையில், பொதுமக்களுக்கு விரைவாக குடும்ப அட்டை வழங்கும்பொருட்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிகாலத்தில் நான் உணவுத்துறை அமைச்சராக இருந்த பொழுது குடும்ப அட்டைகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு வழங்குகின்ற அதிகாரம் செயல்படுத்தப்பட்டது. நியாய விலைக்கடைகளில் உள்ள ஊழலை தடுப்பதற்காக எலக்ட்ரானிக் தராசு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் உணவுத்துறை அமைச்சராக இருந்த பொழுது திருப்பூருக்கு ஆய்வு சென்ற பொழுது நியாயவிலைக்கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கிச் சென்ற நிலை இருந்தன. ஒரே நியாய விலைக்கடையில் 3000த்திற்கு மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருப்பதால், இந்த சிரமத்தை அறிந்து ஒரு நியாய விலைக்கடையில் அதிகப்பட்சமாக 1500 குடும்ப அட்டைகள் இருக்க வேண்டும் என்ற முறையையும், அதேபோன்று கிராமப்பகுதிகளில் 3 கிலோமீட்டர் தொலைவு சென்று நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்குகின்ற நிலை இருந்தது. இந்த நிலையை மாற்றும்பொருட்டு, 1.5 கிலோமீட்டர் தொலைவிலேயே பொதுமக்கள் வசிக்கின்ற பகுதிக்கு ஒரு பகுதிநேர நியாய விலைக்கடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சமத்துவபுரம் போன்ற பகுதிகளில் 100 முதல் 150 குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளுக்கும் ஒரு பகுதிநேர நியாய விலைக்கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாயவிலைக்கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டுக்கிறார்கள். என்னுடைய பொது வாழ்வு என்பது மக்களுக்காக பணியாற்றுகின்ற நல்வாய்ப்பாக கருதுகிறேன். இந்த நல்வாய்ப்பில் பொதுமக்களாகிய உங்களை அரசு திட்டங்கள் சென்றடைந்து, அதன் மூலமாக பயனடைந்து என்னை காணுகின்ற பொழுது நீங்கள் அளிக்கின்ற புன்னகையே என் பொதுவாழ்வில் நான் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். எனக்கு வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து, இந்த திட்டங்களையெல்லாம் நான் சிறப்பாக செயல்படுத்துவதற்கு வாய்ப்பு அளித்த திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த பொது மக்களாகிய உங்களுக்கே இந்த பெருமையெல்லாம் சேரும்.
இந்த திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களுடைய கோரிக்கைகளையெல்லாம் உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான வகையில் ஆட்சி செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பாவுபட்டு மற்றும் நடுப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடங்களை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) மணி, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜன், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழுத்தலைவர் கலைவாணி கலைமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.