செங்கத்தில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, இந்தியாவில் முதல் முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுக மட்டும்தான் என பேசினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் கிழக்கு, மத்திய, மேற்கு, ஒன்றியம் பேரூர், தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவைதலைவர்கள் வீரபத்திரன், சேட்டு, குப்புசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணைச் செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி முன்னிலை வகித்தார்.
செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைதலைவர் கோ.கண்ணன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ. பேசியதாவது :
இந்தியாவில் முதல் முதலில் ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுகதான். மலைவாழ் மக்களுக்கு தனி வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியம் போன்ற வாரியங்கள் அமைத்து திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது
கான்கிரீட் வீடுகள் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். கலைஞர் அறிவித்த கான்கிரீட் வீடுகள் இந்தியா முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்பொழுது தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டம் தொடர்ந்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. திமுக மட்டும்தான் இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கி மாணவர்களுக்கு கல்வி கற்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
சொந்த விருப்பு, வெறுப்புகள் கலைந்து அனைவரும் கடமை உணர்வோடு பாடுபட்டால் மட்டும்தான் தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெறும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கனவுகளும், கொள்கைகளும் மனதில் உள்வாங்கி தற்பொழுது அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கக்கூடிய ஒரு சிறந்த ஆட்சி தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகிறார்.
நாட்டு மக்களுக்கு சட்டமும், திட்டமும் சரியாக சென்றடைய வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும். அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் முழு ஈடுபாடு கட்சி உணர்வோட பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
இதனைத் தொடர்ந்து பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. பேசியதாவது :
10 ஆண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அறிவிப்புகள் மட்டுமே அறிவித்துவிட்டு சென்றுவிட்டனர். திமுக ஆட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் அமைந்த உடன் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுகின்றனர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கனவுகள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால் தொடர்ந்து தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி இருந்தால் மட்டுமே மக்களுக்கான சலுகையும், கட்சியும் பலமாக இருக்கும். தலைமை அறிவிப்பை ஏற்று முழுமையாக ஒவ்வொரு தொண்டனும் பாடுபட்டு தி.மு.க.வின் அலை தமிழ்நாட்டில் வீச வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகரக் செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செந்தில்குமார், ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா உட்பட பல ர் கலந்து கொண்டனர்.