திருவண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று வழங்கினார்கள்.
தேசிய குடற்புழு நீக்க நாள் தினம் நேற்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட்டது. இதில் விடுபட்டவர்களுக்கு 30.08.2024 அன்று வழங்கப்பட உள்ளது. இதில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 அப கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 400 அப கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரை வழங்கப்படும். இம்முகாம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இக்குடற்புழு நீக்க (அல்பெண்டசோல்) மாத்திரை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 7,32,172 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 2,87,998 பெண்களுக்கும் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்ட்சோல்) வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வேங்கிகால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர்களின் கற்றல்; மற்றும் வாசித்தல் திறனை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நேரில் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதார நலப்பணிகள் (திருவண்ணாமலை) மரு.செல்வக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.