திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில்; நெல் 33335 எக்டரிலும், சிறுதானியங்கள் 8048 எக்டரிலும், பயறுவகைகள் 4779 எக்டரிலும், எண்ணெய் வித்து பயிர்கள் 29432 எக்டரிலும், கரும்பு 8316 எக்டரிலும் பயிரிடப்பட்டுள்ளது என்ற விபரம் வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் கிடங்குகளில் நெல் 25271 மெ.டன், சிறுதானியம் 13.18 மெ.டன், பயறுவகைகள் 49.41 மெ.டன், எண்ணெய்வித்து 324.70 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவையான உரங்கள் உள்ளது எனவும், கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் சேர்த்து யூரியா 18255 மெ.டன், டிஏபி 3508 மெ.டன், பொட்டாஷ் 2259 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 708 மெ.டன், காம்ளெக்ஸ் உரம் 12709 மெ.டன் இருப்பில் உள்ளது எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும், நீர்வரத்து கால்வாய் மற்றும் போக்குக்கால்வாய் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பி.எம்.கிசான் நிதி உதவி தகுதியான விவசாயிகளுக்கு பெற்று வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், தோட்டக்கலை துறை மூலம் மிளகாய் நாற்றுகளை வழங்கிட வேண்டும் எனவும், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் இரவு நேரத்தில் திருட்டு நடைபெறுகிறது. அதனை கண்காணித்திட சிசிடிவி கேமரா அமைத்து கண்காணித்திட வேண்டும்.
சம்பா பருவத்திற்கு கூட்டுறவு துறையில் உரம் இருப்பு வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வேளாண்மைத்துறை மூலம் பவர் டில்லர் புல் வெட்டும் கருவி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வேளாண் துறை மூலம் உயர் ரக நெல் விதைகளை வழங்கிட வேண்டும் எனவும், மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் வரப்புக்களை கட்டித்தர வேண்டும் எனவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இலவச மின் இணைப்புகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புதுப்பாளையம் பகுதியில் பொன்னி விதை நெல் வழங்கிட வேண்டும் எனவும், பால் கூட்டுறவு மையங்களில் மிண்ணணு எடை மேடை மூலம் பாலை அளவீடு செய்து பாலின் தரத்திற்கேற்ப பணம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரவிற்பனை நிலையங்களில் போதிய அளவு உரம் இருப்பு வைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாம்புக்கடி விஷக்கடி மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில்; இருப்பு வைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகளின் வைத்தனர். அதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்து சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார்.
தனிநபர் தொடர்பான மனுக்களையும் பெற்றுக்கொண்டார். மேலும் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன், வேளாண்மை இணை இயக்குநர்(பொ), சே.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், (வேளாண்மை) மலர்விழி, உதவி திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஆர்.அருண், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள், பார்த்திபன், வேளாண்மை துணை இயக்குநர்கள், சுந்தரம் மற்றும் ரவிச்சந்திரன், முன்னோடி வங்கி மேலாளர், கௌரி, அரசுதுறை அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.