புதுப்பாளையம் அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன். பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓரவந்தவாடி ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமிற்கு கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் மரு. எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மக்களை தேடி அரசு நிர்வாகம் என்ற அடிப்படையில் மக்களுடைய தேவைகளை உடனுக்குடன் நிவிர்த்தி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் மக்களுடன் முதல்வர் என்னும் இச்சிறப்பு முகாமை செயல்படுத்தி உள்ளார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாள்தோறும் 1 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஐந்து சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. 15 துறைகளைச் சார்ந்த 44 சேவைகளின் மனுக்களும் இம்முகாமில் பதிவு செய்யப்படுகிறது. இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்.
மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 41 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நடத்தப்படும் முகாம்களில் பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்கள் அனைத்தும் விரைந்து நடவடிக்கை எடுக்க அனைத்து அரசு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்படாத பிற மனுக்களும் இம்முகாம்களில் பெறப்பட்டு அவற்றிற்கும் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்,
இவ்வாறு அவர் பேசினார்.
மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்களில் நேற்று பள்ளி மாணாக்கர்களிடமிருந்து சான்றிதழ்கள் கோரி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 1518 விண்ணப்பங்களும், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 1445 விண்ணப்பங்களும், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 522 விண்ணப்பங்களும், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 1313 விண்ணப்பங்களும், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 700 விண்ணப்பங்களும் என மொத்தம் 5498 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உடனடியாக தீர்வு காண மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
நேற்று ஒரவந்தவாடி ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் மனுக்கள் அளித்த நபர்களுக்கு உடனடி தீர்வாக வருவாய்த்துறை சார்பாக 15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், வேளாண்மைதுறை சார்பாக 10 பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுப்பொருட்களும், கூட்டுறவுத்துறை சார்பாக 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பசு வளர்ப்புக்கான மானியம் ரூபாய் 50 ஆயிரம் கடனுதவிக்கான ஆணையினையும் மற்றும் மகளிர் திட்டம் (ஊரக வாழ்வாதார இயக்கம்) சார்பாக 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறு தொழில் தொடங்குவதற்கு நேரடி கடன் ரூபாய் 10 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவரால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 5 இடங்களில் இச்சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் மக்களுடன் முதல்வர் ஊரகப்பகுதி (எம்எம்ஆர்) மூலம் 1737 மனுக்களும், மக்களுடன் முதல்வர் முகாம் (எம்எம்சிஆர்) மூலம் 1039 மனுக்கள் என மொத்தம் 2776 மனுக்கள் பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் வேளாண்மைத்துறை சார்பாக வேளாண் கருவிகள் மற்றும் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெபாஸ்கர பாண்டியன், பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாநில தடகளச் சங்கத்துணைத் தலைவர் மரு. எ.வ.வே.கம்பன்.