தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார், இரட்டணை ஊராட்சியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெருமிதத்துடன் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரட்டணை ஊராட்சியில் முதல்வரின் முகவரித்துறை சார்பில் ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை தாங்கினர். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
முகாமில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக பகுதிகளிலுள்ள மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் முதல்வரின் முகவரித்துறை சார்பில் ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில், இன்றைய தினம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், இரட்டணை ஊராட்சியில், ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதில் உடனடி தீர்வாக, 3 பயனாளிகளுக்கு வீட்டு உபயோகத்திற்கான மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு மக்களின் தேவையறிந்து நிறைவேற்றும் அரசாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளும் போற்றும் முதல்வராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோரிக்கை மனுக்கள் வழங்க வருகைபுரிந்துள்ள பொதுமக்கள், இத்திட்டம் தொடர்பாக மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களும் பயன் பெற்றிட உறுதுணையாக இருந்திடுங்கள்.
இவ்வாறு அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறினார்.
முகாமில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அமைச்சர் மஸ்தான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆர்.புனிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கு.மகேஸ்வரி, க.விஜயன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராஜ்பரத், இரட்டணை ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ரமேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.