திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட கோவில், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட கோவிலாக திகழ்கிறது.
வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார். இதில் தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள்.
முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் ராகு கால நேரத்தில், 11 நெய் தீபம் ஏற்றி, 11 சுற்று வலம் வந்து இவரை வழிபட்டுச் சென்றால் எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல், பில்லி, சூனியம் என தீவினைகளால் துன்பப்படுவோர், நோயுற்றவர்கள் என எவ்விதமான துன்பங்களுக்கும் துயர் நீக்கும் கடவுளாக, சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
சிறப்பு பெற்ற ஸ்தலத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு எட்டு கால யாகசாலை பூஜையுடன் வருகிற 2 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை 1008 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.