சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் மாடுகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, மாநகர சாலை, சர்வீஸ் சாலைகள், செங்குன்றத்திலிருந்து கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் மாடுகளால் இரு – மூன்று சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும், சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டித் தாக்கி காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இரு சக்கர வாகனம், வேன்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக வேலைக்குச் செல்வோர், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், முதியோர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், செங்குன்றம் சுற்றுவட்டாரத்திலிருந்து இச்சாலைகளில் பயணிப்பதற்காக பல்வேறு கிராமங்களிலிருந்து வந்து செல்கின்றனர்.
காலை, மாலை நேரங்களில் சாலையின் நடுவே கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாடுகள் கூட்டமாக ரோட்டின் நடுவே நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் மாடுகள் தங்களை முட்டி விடுமோ என்ற அச்சத்துடனேயே செல்கின்றனர்.
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு தக்க தண்டனையும், அபராதத் தொகையும் விதிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு அதிகாரிகள், பேரூராட்சி – ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?