பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் பங்கேற்பு
செஞ்சி பஸ் நிலையத்தில் உள்ள 15 கடைகள் நேற்று ஏலம் போனது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மொக்தியார்அலி மஸ்தான் பங்கேற்றார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 6 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அன்னை அஞ்சுகம் அம்மாள் பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு ஏலம் விடும் நிகழ்ச்சி செஞ்சி தேசூர் பாட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார்அலி மஸ்தான் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் கடைகளுக்கான ஏலத்தை நடத்தினார்.
முதல் கட்டமாக உணவகம், கழிவறை உள்ளிட்ட 16 கடைகள் ஏலத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கழிவறையை யாரும் ஏலம் கோர வராததால் ஒத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள அனைத்து கடைகளும் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏல நிகழ்ச்சியில் துணை சேர்மன் ராஜலட்சுமி செயல்மணி மன்ற கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.