பராசக்தியால் உலகம் இயங்குகிறது என்பதை பிரம்மாவின் மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெறுவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு கட்டுப்பட்டவளாக இருப்பாள் என்பதால் பெரும் சக்தி தனக்கு கிடைக்குமென நினைத்தார். அவருடைய வரத்தினால் பராசக்தியே சதி என்கிற தாட்சாயிணியாக பிறந்தார்.
தட்சனின் மகளான சதி சிவபெருமான் மீது காதல் கொண்டார். சிவபெருமானை நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் கிடைக்கப்பெரும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
தட்சன் கைலாயம் சென்ற போது, சிவபெருமான் எழுந்து நின்று வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.
சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன்தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள். இதனால் சிவபெருமான் ருத்திரனாக அவதாரம் எடுத்து தட்சனை அழித்தார். அவருடன் பைரவர், காளி, வீரபத்திரர் ஆகியோர் யாகத்தினை அழித்தாக கூறப்படுகிறது.
சிவன், எரிந்த தாக்ஷாயிணியின் உடலை எடுத்து உக்கிரத்தாண்டவம் ஆடினார். அப்போது தாக்ஷாயிணியின் உடல் பகுதிகள் பல்வேறு இடங்களில் சிதறி விழுந்தது. அப்போது வலது கை முதலில் விழுந்த இடம் தான் தண்டகாருண்யம் என்று கூறப்படுகிறது.
மேல்மலையனூரில் புற்றாக இருந்த அங்காள பரமேஸ்வரி, அங்கே வசிக்கும் மீனவர்களின் கனவில் வந்து, இங்கே புற்றில் பாம்பாக இருப்பதாகவும் தன்னை பூஜிக்குமாறு சொன்னதாக கூறப்படுகிறது. அதேபோல், அங்கே இருக்கும் மீனவர்களும் பூஜையிட்டு வழிபாடு செய்து வந்தனர்.
ஆச்சரியம் என்னவென்றால், அங்கே இருக்கும் ஒவ்வொரு மீனவர்கள் தன் பிரச்சினையை கூறி வேண்டுதல் வைக்கும்போது, அந்த பிரச்சினை நிவர்த்தி ஆனது. அதனால் தொடர்ந்து தேவியை வழிபட்டு வந்திருக்கிறார்கள். பிறகு தான் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக ஆனது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். அன்று இந்த கோயிலுக்கு வந்து ஊஞ்சில் இருக்கும் உற்சவர் அங்காளம்மனை தீபம் ஏற்றி வழிபட்டு, எலுமிச்சை பழத்தினார் திருஷ்டி சுற்றினால், ஏவல், பில்லி சூனியம், திருஷ்டி உள்பட சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேல்மலையனூரில் உள்ள மீனவ சமூக மக்கள் இந்த கோவிலை நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் மொத்தம் 7 வம்சாவழியை சார்ந்தவர்கள். ஆண்டொன்றுக்கு ஒரு வம்சாவழியை சார்ந்தவர்கள் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு ஏற்கின்றனர்.