பிரபல ரவுடி கைது
புதுச்சேரி திருபுவனை கலிதீர்த்தால் குப்பம் சந்தா தொகை கேட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் பாக்கி தொகை கேட்ட மளிகை கடையில் பிரபல ரவுடி பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக ரவுடியை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த திருபுவனை கலிதீர்த்தால் குப்பம் பகுதியை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் சரவணன் (வயது 45). இவர் சந்தா அடிப்படையில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்கிற கூழ்பானை சுகுமார் என்பவரது வீட்டில் மாத சந்தா பலமுறை கேட்டும் உள்ளூரில் இருக்கும் தாதாவாக தன்னை காட்டிக் கொள்ளும் சுகுமார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சந்தா தர மறுத்ததால் கேபிள் இணைப்பினை துண்டித்து உள்ளார் சரவணன்.
ஆத்திரம் கொண்ட சுகுமார் அவரது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகி அலறி அடித்து ஓடினர். அதேபோல், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பெருமாள் என்பவர், பாக்கி வைத்ததை கேட்டதற்கு அவர் கடையின் மீதும் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதனால் ஒரே தெருவில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசியதால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
இதனை தொடர்ந்து திருபுவனை காவல் நிலையத்திற்கு தகவல் ஆய்வாளர் கீர்த்தி வர்மா உத்தரவின்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், குற்றவாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தன்னிடம் சந்தா தொகையும், மளிகை கடை பாக்கியும் கேட்டதால் ஆத்திரமடைந்ததாகவும் தன்னுடைய கெத்தை அந்த பகுதியில் காட்டுவதற்காக நான் பெட்ரோல் குண்டு வீசியதாக முதற்கட்ட விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இவர் திருபுவனை காவல் நிலையத்தில் டாப் டென் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.