சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நேற்று இரண்டாவது நாளாக குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 75 வது குடியரசு தின விழா 26 தேதி (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இந்தாண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்றைய தினம் மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், பிரபலங்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதை முன்னிட்டு ஏற்கனவே கடந்த 19 தேதி முதற்கட்ட ஒத்திகை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஒத்திகை நிகழ்ச்சியில், தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படை வீரர்கள், காவல்துறையினர், துணை ராணுவப் படையினர், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பைச்சேர்ந்தவர்கள் பேண்ட், வாத்தியங்கள் முழங்க 47 வகையான அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிற மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் கலந்து கொள்வர் அந்த வகையில் இவ்வாண்டு மேலும் ஆந்திர மாநில காவல்துறை சார்பில் அணிவகுப்பில் கலந்துக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறும் ஆனால் இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் மாற்று இடமாக உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.
ஆளுநர், முதல்வர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வதுபோலவும் ஒத்திகையும் வாத்தியங்கள் இசைப்போரும் பங்கேற்றனர். மங்கள வாத்தியங்கள் உட்பட துறை சார்ந்த 22 அலங்கார ஊர்திகளும் கலந்துகொண்டன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். மேலும் ஒடிசா மணிப்பூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கலை குழுவினரும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வரும் 26 தேதி மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.