பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மயிலம் அருகே ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கிளை சிறையை விரைவில் திறக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம், பழைய நீதிமன்ற வளாகத்தையொட்டி கிளைச் சிறைச்சாலை கடந்த 1894 ஆண்டு கட்டப்பட்டது. இதில் 29 விசாரணை கைதிகள் மட்டுமே அடைக்கக் கூடிய வசதி உள்ளது.
ஆரம்பத்தில் நேரு வீதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் இருந்ததால், நீதிமன்றத்தில் சிறையில் அடைக்க வேண்டிய விசாரணை கைதிகள், அருகிலுள்ள கிளைச் சிறையில் அடைப்பதற்கு போலீசாருக்கு சிரமம் இல்லாமல் இருந்தது. இங்கிருந்த நீதிமன்றங்கள் அனைத்தும் கடந்த 2017 ஆண்டு மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டையில் புதியதாக திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
ஜக்காம்பேட்டையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில், இரண்டரை ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில், ரூ.3.39 கோடி செலவில் புதியதாக கிளைச் சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளது. கைதிகள் எளிதில் தப்பிச் செல்லாதவாறு, சிறையை சுற்றி 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவரும், அதன் மேல் 5 அடி உயரத்திற்கு இரும்பு ரோல் அமைக்கப்பட்டுள்ளது.
வளாகத்தில் 200 விசாரணை கைதிகள் அடைக்கும் வகையிலும், பிரச்சினைக்குறிய கைதிகளை சிறை வைக்கும் வகையில் தனியாக 50 பேர் தங்க வைக்கும் அளவில் செல் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ஓராண்டிற்கும் மேலாகியும் கிளைச் சிறைச்சாலை திறக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும் குற்றவாளிகளை கொண்டு செல்வதில் பாதுகாப்பற்ற நிலை ஒருபுறமும், விழுப்புரத்தில் உள்ள வேடம்பட்டு சிறைச்சாலைக்கு குற்றவாளிகளை கொண்டு செல்லும் தேவையற்ற வழிக்காவல் செலவும் அரசுக்கு வீணாகிறது.
திண்டிவனம் காவல் உட்கோட்டத்தில் போலீசார் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் வேடம்பட்டு சிறைச்சாலைக்கு கைதிகளை கொண்டு செல்லும் வழி காவல் பணிக்கு போலீசார் பயன்படுத்தப்படும் நிலையால் பணிகள் முடிவடைந்த திண்டிவனம் கிளைச் சிறையை விரைந்து திறக்கப்பட வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.