ஆயுத்த ஆடை ஏற்றுமதி பாதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி வீழ்ச்சி
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி அளவு முந்தைய 2022-23 ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்துடன் ஒப்பிடும் போது, நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாத காலத்தில் ரூ.10 ஆயிரத்து 326 கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒன்றிய வர்த்தக அமைச்சரகம் கடந்த திங்களன்று (ஜன.15) வெளியிட்டுள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி புள்ளி விபரம் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் அளவு ரூ.94 ஆயிரத்து 211.8 கோடியாகும். அதே சமயம் 2023-24 நடப்பு நிதியாண்டில் மார்ச் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில் இந்த ஏற்றுமதி அளவு ரூ.83 ஆயிரத்து 885.4 கோடியாக சரிந்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.10 ஆயிரத்து 326.4 கோடி குறைந்திருப்பதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (The Apparel Export Promotion Council AEPC) தொகுத்துள்ள புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாலர் மதிப்பிலான ஏற்றுமதி 14.3 சதவிகிதம் வீழ்ச்சி ஆயத்த ஆடை ஏற்றுமதியை இந்திய ரூபாய் அளவில் ஒப்பிடும் போது 11 சதவிகிதம் குறைந்திருக்கிறது. அதேசமயம் டாலர் மதிப்பில் கணக்கிடும் போது 14.3 சதவிகிதம் சரிவைச் சந்தித்திருக்கிறது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி ஏறத்தாழ 20 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜெர்மனிக்கு அனுப்பும் ஏற்றுமதி அளவு 25 சதவிகிதமும், இங்கிலாந்துக்கு அனுப்பும் ஆயத்த ஆடைகளில் 13 சதவிகிதமும், ஸ்பெயினுக்கு அனுப்புவது 13 சதவிகிதமும் குறைந்துள்ளது.
வரியில்லா வர்த்தகத்தால் ஒரு பயனும் இல்லை
வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதும், விலைவாசி அதிகரித்திருப்பதும் இந்திய ஏற்றுமதி குறைந்திருப்பதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. அதேசமயம் இந்திய ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவித்து அதிகரிக்க, பல்வேறு புதிய நாடுகளுடன் வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப் போகிறோம் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்ட நாடுகளில் கூட ஏற்றுமதி அளவு சொல்லிக் கொள்ளும்படியாக அதிகரிக்கவில்லை என்பதே மற்றொரு உண்மையாகும்.
வேலையின்மை-விலைவாசியால் உள்நாட்டுச் சந்தையும் பாதிப்பு
ஏற்றுமதி சந்தை பாதிக்கப்படும் நிலையில் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க உள்நாட்டு சந்தையை பலப்படுத்த இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு காரணமாக உள்நாட்டு சந்தையும் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
பிற ஆயத்த ஆடை ஏற்றுமதி நாடுகளின் கடும் போட்டியைச் சந்திக்க முடியாமல் இந்திய ஏற்றுமதியாளர்கள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். ஆனால் இந்திய உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக, மிகப்பெருமளவு சிறு, குறு, நடுத்தரத் தொழிலாக நடை பெற்று வரும் ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு குறிப்பிடத்தக்க எந்தச் சலுகையும், வசதி வாய்ப்பும் செய்து தரவில்லை.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் 40% நிறுவனங்கள் நலிவை சந்தித்துள்ளன. மாறாக ஒன்றிய அரசின் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி நடைமுறை, கொரோனா காலப் பொது 5 முடக்கம் மற்றும் மூலப்பொருட்கள் விலையேற்றம் ஆகியவை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை பாதாளத்திற்குத் தள்ளியது. ஏறத்தாழ 40 சதவிகித நிறுவனங்கள் நலிவை சந்தித்துள்ளன. அத்துடன் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எவ்வித வரைமுறையும் இல்லாமல் ஆயத்த ஆடைகளும், ஜவுளித்துணி வகைகளும் இந்திய சந்தைக்குள் குவிக்கப்படுகின்றன.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் இதனால் மிகப்பெரிய ஆதாயம் அடைகின்றனரே தவிர, 5 உள்நாட்டு சிறு, குறு நடுத்தர ஜவுளி நிறுவனங்கள் நெருக்கடிக்குள் – தள்ளப்படுகின்றன. எனினும் ஒன்றிய அரசு ஏற்றுமதி சரிவு, தொழில் நலிவைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஏனெனில் புள்ளி விபரங்களை வெளியிட்டதில், கொரோனா பொது முடக்கக் காலத்தை விட நடப்பு ஆண்டு ஏற்றுமதி அளவு அதிகரித்திருக்கிறது என்று ஒன்றிய அரசு கூறிக் கொண்டுள்ளது.