கிளாம்பாக்கத்தில் இலவச மினிபஸ் சேவை பயணிகள் ‘நடை சிரமம்’ குறைகிறது
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு, அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து, பஸ் ஸ்டாண்டுக்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது.
பஸ் ஸ்டாண்டில் மாநகர் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்து, வெளியூர் செல்லும் பஸ்கள் இருக்கும் இடத்துக்கு செல்வதற்கு நீண்ட துாரம் நடக்க வேண்டியுள்ளது. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் இரவு கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்தார். அப்போது, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கல்களை நேரில் கண்டார். இதையடுத்து, பயணிகள் வசதிக்காக இலவச மினி பஸ்கள் இயக்க உத்தரவிட்டார்.
நேற்று காலை முதல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, பயணிகளுக்காக இலவச மினி பஸ்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. மாநகர பேருந்துகளில் வரும் பயணிகள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு, இலவச மினி பஸ்களில் உற்சாகமாக பயணிக்கின்றனர்.
அதேபோல் வெளியூர் பஸ்களில் வரும் பயணிகள், இலவச மினி பஸ்களில் ஏறி, மாநகரப் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு வருகின்றனர்.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நேற்று காலை ஆய்வுசெய்தார். பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா? குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் போதுமான அளவு உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.”