சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் கடைசி வரை வெளியாகுமா ஆகாதா என்கிற சிக்கலில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பல ஆண்டு கால தடைகளை உடைத்துக் கொண்டு வெளியாகி விட்டது. இந்த பொங்கலுக்கு ஏலியன் உடன் வந்து குட்டி சுட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷத்தில் ஆழ்த்த களமிறங்கி உள்ளார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள அயலான் படத்தின் சிஜி காட்சிகள் நிச்சயம் பேசப்படும்.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுப்பிரியா, ஷரத் கேல்கர் மற்றும் இஷா கோபிக்கர் என பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். லேட்டா வந்துள்ள படம் லேட்டஸ்ட்டாக உள்ளதா? அல்லது ரொம்ப பழைய டெம்பிளேட் கதையா? என்கிற விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
பேராசை பிடித்த பணக்காரர்கள் மேலும், மேலும் சொத்து சேர்க்க இந்த பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர் என்றும் அதிலும், ஒருவர் ஒட்டுமொத்தமாக அழிக்கத் திட்டமிட்டு இருப்பதை வேற்று கிரகத்தில் இருந்து கவனிக்கும் ஒரு ஏலியன் பூமிக்கு வந்து அந்த வில்லனிடம் இருக்கும் பொருளை எடுக்க முயற்சி செய்கிறது. ஆனால், அந்த ஏலியனை அடைத்து வைத்து வில்லன் ஆராய்ச்சி என்கிற பெயரில் சித்ரவதை செய்ய அந்த ஏலியனுக்கு நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன் எப்படி உதவி செய்கிறார் என்பது தான் இந்த அயலான் படத்தின் கதை.
வில்லன் ஷரத் கேல்கர் ஆர்யன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பேராசையால் 2030-ல் இந்த பூமி அழிந்து விடும் என்பதை அறிந்து கொள்ளும் ஏலியன் பூமியை காப்பாற்ற புறப்பட்டு வருகிறது. ஹீரோ அர்ஜுன் (சிவகார்த்திகேயன்) உடன் விபத்து காரணமாக சந்திப்பு ஏற்படுகிறது. பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்கும் நபரான அர்ஜுன் தனது காதலுக்கு ஏலியனை பயன்படுத்துவது மற்றும் யோகி பாபு, கருணாகரன் உடன் இணைந்து காமெடி செய்வது என குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக கதை நகர்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் முக்கிய கதையை நோக்கி படம் நகரும் போதும் ரவிக்குமார் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி கடைசி வரை போரடிக்காமல் பழைய டெம்பிளேட் கதையை பக்குவமாகவும் என்டர்டெயின் படமாகவும் கொடுத்திருக்கிறார்.
ரவிக்குமாரின் ஸ்க்ரீன் பிளே மேக்கிங் படத்தை அதிக இடங்களில் காப்பாற்றி விடுகிறது. சிவகார்த்திகேயனின் துடிப்பான நடிப்பும் துள்ளல் ஆட்டமும் காமெடி டைமிங்கும் இந்த படத்தை குடும்பத்துடன் இந்த பொங்கலுக்கு பார்க்க வைக்கும் படமாக மாற்றி உள்ளது. ஏலியனுக்கு சித்தார்த் குரல் கொடுத்த விதம் ஆர்யனாக வில்லன் ஷரத் நடித்திருப்பது என அனைத்துமே படத்திற்கு பக்க பலம் தான். யோகி பாபு மற்றும் கருணாகரன் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர். படத்தின் பட்ஜெட், பல வருட கால தாமதம் என பல பிரச்சனைகள் இருந்தாலும் சிஜி காட்சிகள் எல்லாம் செம மாஸாக தரமாக உள்ளது.
மைனஸ்: ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசை மற்றும் எமோஷனல் இடங்களில் ஸ்கோர் செய்யும் அளவுக்கு பாடல்களில் ஸ்கோர் செய்யாமல் விட்டது படத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. வழக்கமான டெம்பிளேட் கதை என்பதால் படம் எப்படி முடியும் என்பதும் யூகிக்கக் கூடிய வகையிலேயே படம் நகர்வது மைனஸ் தான். ஆனாலும், தியேட்டரில் இந்த பொங்கலுக்கு ஜாலியாக ஒரு ஏலியன் படத்தை பார்க்கலாம்.