என் வாழ்நாளில் நான் பார்த்து ரசித்த, உணர்வு பூர்வமான திரைப்படங்களில் ஒன்று. செல்லையா (மறைந்த நடிகர் ‘பூ’ ராம் – அந்த கலைஞனுக்கு நம் நினைவஞ்சலி), மரம் ஏறும் தொழில் செய்து ஓய்வு பெற்ற ஒரு ஏழை தொழிலாளி, அவரது பேரன் கதிர் (மாஸ்டர் தீபன்) ஆகிய இருவரும் கருப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் தங்களது ஆட்டை விற்க விரும்பிய போது, அதை வாங்க வரும் கசாப்புக் கடைக்காரன் வெள்ளைச்சாமியின் (காளி வெங்கட்) வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். செல்லையா தனது சொந்தக் குழந்தை போல் அந்த ஆட்டை வளர்த்து வருகிறார். அவரது பேரன் கதிர் அதை முழு மனதுடன் தனது உடன்பிறப்பு போல நேசிக்கிறான்.
பேரனுக்கு தீபாவளிக்காக புது ஆடை வாங்க பணம் இல்லாததால், செல்லையா வேறு வழியின்றி தனது ஆட்டை கசாப்பு கடைக்காரரிடம் விற்க முடிவு செய்கிறார். தன்னால் இயன்றவரை முயற்சி செய்தும், பண்டிகையை கொண்டாடுவதற்கு கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுக்கும் படி தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டும் கிடைக்கவில்லை. பண்டிகைக்கு புதிய ஆடை மற்றும் பட்டாசு வாங்குவதற்கு தாத்தாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் பேரன், தீபாவளி நெருங்க நெருங்க ஏமாற்றப்பட்டதாக உணர்கிறான்.
தன் பேரன் விரும்பி கேட்டதை வாங்கி தர முடியாத விரக்தியில் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக தனது ஆட்டை கனத்த மனதுடன் விற்க செல்லையா முடிவு செய்கிறார். இதை அறிந்த அந்த ஏழை சிறுவனுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. இருப்பினும் ஆசையாய் வளர்த்த ஆட்டை விற்க வேண்டாம் என்று தனது தாத்தாவிடம் கெஞ்சுகிறான்.
இதற்கிடையில் வெள்ளைச்சாமிக்கு தீபாவளி அன்று தனது சொந்தத் தொழிலைத் தொடங்க ஒரு ஆடு தேவைப்படுகிறது. அவர் தனது முதலாளியிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு, தான் பார்த்த வேலையில் இருந்து வெளியில் வருகிறார். அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த அவர் சொந்தமாக தீபாவளி அன்று தனது கசாப்பு தொழிலைத் தொடங்க விரும்புகிறார். அதற்காக வெள்ளைச்சாமி ஆடு வாங்க பணத்துடன் வரும்போது செல்லையாவின் கருப்பு கிடாவை காணவில்லை. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கிடா படத்தின் கதை.