ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
எடப்பாடி பழனிச்சாமியை சிறைக்கு அனுப்பும் ரகசியம் என்ன என்பதை உரிய நேரத்தில் வெளியிடவேன், என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீரசெல்வம் கூறினார்.
கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது
அதிமுக கட்சியை எம்.ஜி.ஆர் உருவாக்கியபோது கட்சியின் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய அடிப்படை தொண்டர்களுக்கு உரிமை அளித்து, கட்சி விதிகளை அவர் வகுத்தார். ஆனால், அவற்றை தகர்த்து, அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்றுள்ளார். அதை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் கட்சி மீட்புக்குழு கூட்டத்தை தமிழகம் முழுவதும் நாங்கள் நடத்துகிறோம்.
இரு அணிகளாக செயல்பட்டு ஓட்டுக்களை உடைப்பதால், கட்சி வெற்றி பெற முடியவில்லை. முதல்வராக பழனிசாமி பதவியேற்ற பின்னர், எல்லா தேர்தல்களிலும் தோல்வியையே அவர் சந்தித்தார். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் பொதுச் செயலாளர் பதவியையும் அவரே சூட்டிக் கொண்டு, மோசமான சூழல் ஏற்படுத்தி விட்டார்.
கட்சியின் பல பிரிவுகள் சேர்ந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். ஏற்கனவே தினகரனுடன் நாங்கள் இணைந்து விட்டோம். கொள்கை ரீதியாக சில கோரிக்கைகளை தினகரன் தரப்பு வைத்துள்ளது. நாங்களும் சில கோரிக்கை கள் வைத்திருக்கிறோம். எங்களுடன் இணைந்து சசிகலா செயல்பட இருக்கிறார். அதை அவரே விரைவில் அறிவிப்பார்.
தர்மயுத்தம் நடத்திய போது, என்னுடன் இணைந்து செயல்பட்டு, எங்களால் வளர்க்கப்பட்டவர் முனுசாமி. அதன் பின்னர் பழனிசாமியுடன் இணைந்து, ரகசிய கூட்டணி வைத்து எங்களையே அவர் முதுகில் குத்தினார். அவரை விமர்சிக்க அவசியமில்லை. நம்பிக்கை துரோகிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் பழனிசாமி ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டதை நாங்கள் வரவேற்கிறோம். கட்சி மீட்பு சட்ட போராட்டத்தில் எந்த சூழலிலும் கோர்ட்டை நாங்கள் விமர்சிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை சென்று நாங்கள் போராடி வருகிறோம். இறுதியில் வெற்றி பெறுவோம்.
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பல கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. இது குறித்து முதலில் பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்படும். விரைவில் திகார் ஜெயிலுக்கு பழனிசாமி செல்வார் என பேசியது குறித்து விளக்கமாக கூற முடியாது. அந்த ரகசியத்தை. உரிய நேரத்தில், உரிய இடத்தில் நான் வெளியிடுவேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்