பீதியில் இருந்த கிராம மக்கள் நிம்மதி
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் 2 பெண்களை கொன்ற சிறுத்தை சிக்கியது.
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் நடந்து சென்ற 3 பெண்களை சிறுத்தை தாக்கியது. அதில் சரிதா என்பவர் இறந்தார். அதே பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் சிறுமி ஒருவர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மனிதர்களைத் தொடர்ந்து தாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தி, மக்கள் கடையடைப்பு மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர், 6 இடங்களில் கூண்டுகளை அமைத்து கண்காணித்து வந்தனர். கூண்டில் சிக்காமல் வனத்துறையினருக்கு சிறுத்தை, போக்கு காட்டி வந்தது.
பந்தலுார் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சென்ற வட மாநில சிறுமியை, தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை, தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தத்தை கேட்ட தொழிலாளர்கள், தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமி பரிதாபமாக இறந்தார். இறந்த சிறுமி, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவ சங்கர் குருவா மற்றும் மிலந்தி தேவி தம்பதியின் மகள் நான்சி(3) என தெரிய வந்தது.
சிறுத்தை தாக்குதல் தொடர்ந்ததால், மீண்டும் ஆவேசமடைந்த மக்கள், தொண்டியாளம் உட்பட 3 பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலுார் தாலுகாவில் வனத்துறையினரை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அருணா, எஸ்.பி.சுந்தரவடிவேல் உட்பட்டோர் மக்களிடம் சமாதானம் பேசி வந்தனர்.
சிறுத்தையை சுட்டுக் – கொல்ல வேண்டும் என மக்கள் வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.
கோவை சரக டிஐஜி சரணவசந்தர், நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். மக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். சிறுத்தையை பிடிக்க முதுமலையில் இருந்து 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டது. ஆம்பரோஸ் என்ற பகுதியில் புதரில் சிறுத்தை பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார், கும்கி யானையில் அமர்ந்து சிறுத்தைக்கு மயக்க ஊசியை வெற்றி கரமாக செலுத்தினர். மயக்கமடைந்த சிறுத்தையை வனத்துறையினர். வலையை போட்டு பிடித்து கூண்டில் அடைத்தனர்.