ரூ.7,000 போனஸ் வழங்க வேண்டும்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல, மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கும் போனசாக ரூ.7,000 வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலர் லட்சுமி நாராயணன் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
2006 திருத்த சட்டப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு போனசாக ரூ.7,000 வழங்கப்படுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ரூ.7,000 போனசாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.3,000 மட்டும் போனசாக வழங்குவது ஏற்புடையதல்ல.
அது போல ஏ,பி., பிரிவினருக்கு கருணை தொகை வழங்க மறுத்ததை எதிர்கட்சித் தலைவராக இருந்த போது கண்டித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது அதே கருணைத் தொகையை வழங்க மறுப்பதும் நியாயமான செயலாக தோன்றவில்லை.
இந்த ஆண்டும் சிறப்புக்கால முறை ஊதியத்தில் பணியாற்றும் வருவாய் கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அனைவருக்கும் வழங்குவது போல போனஸ் வழங்கப்படவில்லை.
போனஸ் என்பது இனாம் இல்லை. கருணைத் தொகையும் இல்லை. சம்பளத்தின் ஒரு பகுதியே போனஸ் என்பதை மறக்கக் கூடாது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அனைவருக்கும் சரியான போனஸ் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.