புதுக்கோட்டை மாவட்டம், தச்சன் குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 58 பேர் காயமடைந்தனர்.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், தச்சன்குறிச்சி அடைக்கல அன்னை தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு காளியம்மன் கோயில் எதிரே நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார். ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
காளைகளை கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் பரிசோதனை செய்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதியேற்றனர்.
முதலில் கோயில் காளைகளும் பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த சுமார் 700 க்கும் மேற்பட்ட காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் பல சுற்றுகளாக களமிறங்கி அடக்கினர். பல காளைகள் பிடிபடவில்லை.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 53 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த மதுரை மருதா (19), அலெக்ஸ்பாண்டியன் (30), திருச்சி, திருவெறும்பூர், பிலோமின்ராஜ் (24) உள்ளிட்ட 9 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், சைக்கிள், மிக்ஸி, கட்டில், பீரோ, மின் விசிறி, ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் பங்கேற்ற அமைச்சர்களும் சிறப்புப் பரிசுகளை வழங்கினர்.