தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர். எந்தப் பொருளும் பெறாத குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
மனித குலத்துக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழுக் கரும்பு ஆகியன பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப் படும் என்று கடந்த 2 -ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி – சேலைகள் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் ரொக்கப் பரிசு
பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாட ரூ.1,000 ரொக்கமும் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்தப் பொருளும் பெறாதவர்களைத் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப் பரிசு கிடைக்கும்.
மகளிர் உரிமைத் தொகை
ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே, அதாவது வரும் 10-ம் தேதியே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
எத்தனை பேருக்குப் பயன்?
அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பானது 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.238.92 கோடியை ஒதுக்கீடு செய்து ஏற்கனவே உத்தரவிட்டது. இவை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் கிடைக்கும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 ரொக்கத் தொகையும் இப்போது இடம் பெற்றுள்ள நிலையில், அதற்கென தனியான உத்தரவை அரசு பிறப்பிக்கவுள்ளது.
கரும்பு கொள்முதல்
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக கடந்த ஆண்டைப் போன்று முழுக் கரும்பு ஒன்றுக்கு தோராயமாக ரூ.33 வீதம் கொள்முதல் செய்ய தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் இதற்கென குழுக்களை அமைத்து கரும்புகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.