திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் வேளாண் விரிவாக்க மையத்தில் 2 நாட்களுக்கு முன் பெரணமல்லூர் அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏற்கனவே வாங்கிய விதைகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜிடம் ரசீது கேட்டுள்ளார்.
வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜ் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும் என்றும், அலுவலகத்துக்கு செலுத்த வேண்டிய பாக்கியை கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோபம் அடைந்த வேளாண் உதவி இயக்குனர், அலுவலகத்தில் இருந்த ஒரு கட்டையை எடுத்து விவசாயியை தாக்க முயன்றுள்ளார். இந்த வீடியோ வாட்ஸ்ஆப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் 2 நாட்களுக்கு முன் (3 தேதி) பெரணமல்லுார் யூனியன் அலுவலகம் முன் விவசாய சங்கத்தினர் கூடி வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மாலை வரை நடந்த ஆர்ப்பாட்டத்தில் சமரசம் பேசி அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் சென்னை வேளாண்மை ஆணையர், பெரணமல்லுார் வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜை சஸ்பெண்ட் (தற்காலிக பணி நீக்கம்) செய்து உத்தரவு அனுப்பியுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஹரக்குமார் தெரிவித்தார்.