2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
வந்தவாசி அடுத்த கெங்கம் பூண்டி கிராமத்தில் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வந்தவாசி அடுத்த கெங்கம் பூண்டி கிராமத்தில் முனீஸ்வரன் கோயில் உள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் (53) என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3-ம் தேதி இரவு வழக்கம் போல் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் கோயில் கருவறை பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டதால் அவ்வழியாக விவசாய வேலைக்கு சென்ற ஒருவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் வந்து திருடர்கள் 3 பேர் கோயிலில் இருந்து தப்பி ஒரே பைக்கில் தேசூர் சாலை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றனர். உடனடியாக இதுகுறித்து தேசூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடக்குபட்டு சாலையில் ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் தலைமையிலான போலீசார் பைக்கில் வந்த மர்ம நபர்களை தடுத்து நிறுத்தினர்.
போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்ப முயன்றவர்களை மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை செய்ததில் கோயில் மணி, தாம்பூல தட்டு, ரொக்கப் பணம் 500 இருந்தது தெரிய வந்தது.
விசாரணை செய்ததில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா சிறுதாம்பூர் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் ரூபிரவீஸ் (19) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் எனவும், கோயில் வெளிப் பகுதியில் இருந்த பூட்டை உடைத்து பணம், மணி, தாம்பூல தட்டு திருடியது தெரிய வந்தது.
கருவறையில் இருந்து நகையை திருடுவதற்காக பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து பைக்கில் தப்பியதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, திருவண்ணாமலை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி 2 சிறுவர்களை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
ரூபிரவீஸை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர்