கேலோ இந்தியா போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு.
பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து , கேலோ இந்தியா போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கவுள்ளார்.
கிரிக்கெட், ஹாக்கி தவிர மற்ற விளையட்டுப் போட்டிகளில் திறைமையானவர்களைக் கண்டறிந்து பயிற்சியளித்து, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்யும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்போட்டிகள் இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் ஜன-19 முதல் 31-ம் தேதி வரை போட்டிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டியின் நிறைவு விழாவை சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த விளையாட்டுத் துறை திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில், நிறைவு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார்.
இன்று பிற்பகல் பிரதமரைச் சந்தித்து அழைப்பிதழை வழங்குகிறார்.தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூறையும் சந்தித்து அழைக்கிறார். அதன்பின் அமைச்சர்கள் சிலரையும் சந்தித்து தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி தொடர்பாக பேசுவார் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
கேலோ இந்தியா போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதாற்காக டெல்லி செல்கிறேன்.
பிரதமரைச் சந்திக்கும்போது தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை கூடுதலாக வழங்கும்படி வலியுறுத்துவேன். பொங்கலுக்கு ரூ,1000 ரொக்கம் தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார். இம்மாத இறுதிக்குள் திமுக இளைஞரணி மாநாடு நடத்துவது தொடர்பான அறிவிப்பு இரண்டொரு நாளில் வெளியிடப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.