திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.சக்தி கிருஷ்ணன் பங்கேற்றார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பட்டமளிப்பு விழா அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதிதாசன் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை பிரதமர் வழங்கினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்த இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான ராஜ கண்ணப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரான எஸ்.கே.பி. கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.சக்தி கிருஷ்ணன் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, 2021-2023-ம் ஆண்டில் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், துணைவேந்தர் எம்.செல்வம் உள்ளிட்டோருடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.