திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழருவி என்பவர் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பேக்கரி மற்றும் இனிப்புக் கடை நடத்தி வருகிறார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பேக்கரி கடையில் பணியாற்றி வரும் நந்தகுமார் (32) என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்தார்.
இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் பேக்கரி கடையின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசினர். இதில் கடையின் உள்ளே விழுந்த ஒரு பெட்ரோல் குண்டு வெடித்ததில் கடை தீப்பற்றி எரிந்தது. நந்தகுமார் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது.
நந்தகுமார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதைக் கண்டு மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான நகரக் காவல் துறையினர் நந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்ப தொடர்பாக காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.