வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமினை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து கல்வி கடன் பெறுதற்கான ஆணையினை வழங்கினார்.திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி வளாக கூட்டரங்கில் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமினை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.
145 மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 கோடியோ 20 இலட்சம் மதிப்பிலான கல்வி கடன் பெறுதற்கான ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), செ.ஆ.ரிஷப் ஆகியோர் உடனிருந்தனர்.
அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது :
மக்களின் நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை நடுநிலை தவறாது ஆட்சி நடத்துவது சிறந்த அரசு என்ற திருவள்ளுவர் வாக்கின்படி இந்த அரசு செயல்பட்டு வருகிறது. கடன் வழங்குவது என்பது முதன் முதலாக இரண்டாம் உலகப்போருக்கு பின்பு தான் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. உலக அளவில் பல்வேறு வங்கிகள் உள்ளது. அதில் சர்வதேச நாணய நிதியும் உலக வங்கி, சர்வதேச நீதி கழகம் போன்ற சர்வதேச அமைப்புகள் மூலம் தான் பொருளாதாரத்தில் புதிய தாக்கங்கள் இன்று உருவாகியிருக்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு அமைப்புகள் கடன் வழங்க தயாராக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்ற துறைகளில் மூலம் திட்டங்கள் அறிவித்து சமூகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக கல்வி கடன் வாங்குவதன் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படும் முடியும். கல்வி கடன் வழங்குவதால் தொழில் நடத்திப் பொருட்களை ஈட்ட முடியும் என்ற அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
கல்வியின் மூலம் தான் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற அடிப்படையில் வங்கிகள் கடன் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனி மனித வளர்ச்சி தான் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஒரு காலத்தில் கல்வி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தம் என்ற நிலை இருந்தது. பின்பு பெரியார், அண்ணா, கலைஞர் கல்வி அனைவருக்கும் பொதுவானது என்ற நிலையை சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் வழிநடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் சமுதாயத்தில் சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் செயலாற்றி வருகிறது.
பெண்கள் கல்வி கற்பதற்கு பல்வேறு நிலைகளில் இருந்த அரசு உறுதுணையாக உள்ளது. நமது மாவட்டம் விவசாய சார்ந்த மாவட்டம் ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லை மற்ற மாவட்டங்களுடன் நமது மாவட்டதை ஒப்பிட முடியாது. இங்கு விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இங்கு கல்வி படிக்கும் பிள்ளைகள் அனைவரும் விவசாயிகளின் பிள்ளைகள் அதனை மனதில் வைத்து இங்கு கடன்கள் கொடுப்பதில் வங்கிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை நமது மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2006-2011 ஆம் ஆண்டில் நான் பெரும் முயற்சி செய்து செய்யார் சிப்காட் பூங்காவை கொண்டு வந்தேன்.அதனால் தான் இப்போது அந்த பகுதியில் உள்ள 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் விவசாயம் நடைபெறாத நிலத்தை தொழிற்சாலைகள் உருவாக்க எடுக்கப்படுகிறது.
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் பொருளாதாரத்தின் மேம்படுத்த முடியும். நமது மாவட்டம் மற்றும் மாநில வளர்ச்சி அடைய வங்கிகள் இன்னும் அதிகமான கடன்களை வழங்க வேண்டும். கடன் உதவிகளை பெறுபவர்கள் இந்த மாநிலத்துக்கும், மாவட்டத்துக்கும் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், இந்தியன் வங்கி திருவண்ணாமலை மண்டல மேலாளர் அருண்பாண்டியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.கௌரி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கே.பி.கணேசன், உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி தனகீர்த்தி, மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.