திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக மன்ற கூட்டரங்கில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் சீ.பார்வதி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்கப்பட்டன.
அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றியதாவது
திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் ஆன்மிக பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. பிறநகரங்களை போல இந்நகரம் இல்லை. சாலைகள் விரிவானது இல்லை. எனவே, நம்முடைய ஊரின் அமைப்பை வைத்துத்தான் அதற்கான திட்டமிட வேண்டியிருக்கிறது. திருவண்ணாமலை 9 சாலைகளை கொண்டிருக்கிறது. திருப்பதியில் கீழ்திருப்பதி, மேல்திருப்பதி என்று உள்ளது. அங்கு பக்தர்கள் மட்டும்தான் செல்ல முடியும். ஆனால், திருவண்ணாமலை குடியிருப்புகள், வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் வருகை தரம் நகரம். எனவே, இவை அனைத்து நலன்களையும் கருத்தில் கொண்டு, நடைமுறையில் என்ன செய்யலாம் என்று திட்டங்களை தீட்ட வேண்டியிருக்கிறது.
பக்தர்களின் வருகையால் இந்த நகரமும், நகரின் பொருளாதாரமும் வளர்கிறது. எனவே, பக்தர்களின் வருகை மகிழ்ச்சிக்குரியது. எனவே, அவர்களுக்கான வசதிகளை செய்துத் தருவதும், அவர்களுக்கு தொண்டு செய்வதும் அவசியம். ஊர் நலன்தான் முக்கியம். நகரின் ஒட்டுமொத்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
மாநில அரசு திருவண்ணாமலை நகருக்கு கூடுதலான நிதியை ஒதுக்கி பணிகளை செய்து வருகிறது. அதேபோல், அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் விரைவான தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்வது அவசியம். அதற்கு விரைவில் திட்டங்கள் தீட்டப்படும். கோயில் நடைதிறப்பு நேரம், தரிசன நேரத்தை நீட்டிப்பது குறித்து அறநிலையத்துறையின் ஆலோசனைகளை பெற்று, ஆகமவிதிகளுக்கு உட்பட்டு முயற்சிகள் எடுக்கப்படும்.
வெளியூர் வாகனங்களை முறையான இடங்களில் நிறுத்தவும், உள்ளூர் வாகனங்களுக்கு நிரந்தர அடையாள அட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை நகரம் தினமும் தீபத்திருவிழா போல மாறிவிட்டது. எனவே, வாகன போக்குவரத்து சீரமைப்பு செய்ய வேண்டியது அவசியமாகியிருக்கிறது. நகருக்குள் வரும் வாகனங்கள் முறைப்படுத்தப்படும். கிரிவலப்பாதை, மாடவீதியில் போக்குவரத்து மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்களின் வசதிக்காக சர்வதேச தரத்தில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. உள்ளூர் மக்கள் பாதிக்காதபடி, ஆன்மிக பக்தர்களுக்கான வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.