முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பூர்வீக வீடு குமரி மாவட்டம், குழித்துறை பழயபாலம் அருகில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெறும் வகையில் தனது பூர்வீக வீட்டை பொது நுாலக மாற்றும் பணி நடைபெற்று வந்தது.
இப்பொது நுாலகத்திற்கு தனது தாய், தந்தை பெயரான ரத்தினம்மாள் செல்லப்பன் என்று பெயர் சூட்டினார்.
நூலகத்தை நேற்று அவரது தாயார் ரத்தினம்மாள் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. ஐதராபாத் மாணவி ஒருவர் 1,000 புத்தகங்களை இந்த நுாலகத்திற்கு இலவசமாக வழங்கினார். டிஎன்பிஎஸ்சி, நீட், சிவில் சர்வீஸ், வங்கித் தேர்வுக்கான புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இலவச தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. இன்டர்நெட் வசதியுடன் 6 கம்ப்யூட்டர்கள் உள்ளன. காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை இந்த நூலகம் செயல்படும்.
இது தொடர்பாக சைலேந்திர பாபு கூறியதாவது
இந்த வீடு, நுாற்றாண்டு பழக்கம் உள்ளது. சில சுவர்கள், ஈட்டி மரத்தினால் கட்டப்பட்டது. பக்கத்தில் உறவினர்கள் வீடு உள்ளது. நான் இந்த வீட்டில்தான் பிறந்தேன். போட்டி போட்டு படித்தோம். அப்போது போதுமான வசதிகள் கிடையாது. விவசாய வருமானத்தைக் கொண்டே பெற்றோர் எங்களை படிக்க வைத்தனர். இந்த வீட்டில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து, டிஜிபி வரை பதவி வகிக்க முடிந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. என் நண்பர்களுடன் இணைந்து 150 மாணவ, மாணவர்களைப் படிக்க வைத்துள்ளோம். 50 மாணவர்கள் உயர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லுாரிகளில் சேரலாம். மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலை வாய்ப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, வாசிப்பை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
வாசிப்பு மிகப்பெரிய சுகம். ஆர்வத்துடன் தேடிப் படிக்க வேண்டும். அப்போது திறமை, தானாக வளரும். இப்போதுள்ள மாணவர்களிடம் விளையாட்டு, சினிமா ஆர்வம் இருக்கிறது. ஆனால் அறிவியல், கணிதம், மொழிகள் கற்க வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்கள், நோபல் பரிசுகள் பெற வேண்டும் என அவர் கூறினார்