உயர்கல்வி வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி அண்ணா அரங்கில் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 2023-2004 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி 957 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கினார்.
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது
“விஐடியின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதவர்கள் இணைந்து எனது பிறந்த நாளுக்காக தங்களது ஒரு நாள் ஊதியமாக ரூ.1.35 கோடி நிதியை அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளனர்.கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள்தான், வளர்ந்த நாடுகளாக இருக்கும். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பள்ளி கல்வியோடு நிறுத்திவிட்டார்கள். ஏனென்றால், கிழக்கிந்திய கம்பெனியில் அவர்களுக்கு கிளார்க் பணிக்குத்தான் ஆட்கள் தேவைப்பட்டனர். ஆனால், தற்போது அந்த நிலைமை இல்லை. மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உயர்கல்வி பெற்றோர்களால் தான் நடந்து வருகிறது. உயர் கல்வியில் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்கள்தான் கண்கண்ட தெய்வம். விஐடியில் படித்த மாணவர்கள் 84 நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
உலக அளவில் வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு பணம் 3 அனுப்புபவர்களில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். இந்தாண்டு இதுவரை ஆண்டுக்கு ரூ.9 லட்சம் கோடி இருக்கும். ஆண்டு முடியும் போது அது ரூ.10 லட்சம் கோடி மாறும். நாம் இன்னும் ஆங்கிலத்தை வைத்துக் கொண்டிருப்பதால்தான் இது சாத்தியம். உயர்கல்வி வீட்டையும், நாட்டையும் உயர்த்தும். அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு வரை வழங்கிய கல்வி உதவித்தொகை நிதி இந்தாண்டு இரட்டிப்பாக்கி கொடுக்கிறோம்.
உயர் கல்வியில் இந்தியா பின் தங்கியுள்ளது. இதை சரி செய்ய புதிய கல்வி கொள்கையில் வழி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 4 கோடி பேர் உயர்கல்வி கற்கின்றனர். 10 கோடி பேர் உயர் கல்வி படிக்காமல் உள்ளனர். உயர் கல்விக்குள் கொண்டு வர வேண்டும். இதற்காக பேசினால் மட்டும் போதாது செலவும் செய்ய வேண்டும். உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையில் தென்மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.அதேபோல், இந்தியாவின் தனி நபர் வருமானம் சராசரியாக 2,600 அமெரிக்க டாலராக உள்ளது.
தென் மாநிலங்களில் 3,500 முதல் 4,000 அமெரிக்க டாலராக இருக்கும் போது பிஹார், உ.பி.யில் 1,000 டாலருக்கும் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் கல்வியில் பின் தங்கியுள்ளனர். அவர்களும் சேர்ந்து வளர்ந்தால்தான் நாடு வளரும். ஏழைகள், ஏழைகளாக இருக்க கூடாது. அதை கல்வியால்தான் மாற்ற முடியும்” என்றார்.
பெங்களுரூ ராமையா பல்கலைக்கழக வேந்தரும் கோகுல கல்வி நிறுவனத்தின் தலைவருமான எம்.ஆர்.ஜெயராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி பேசும்போது”கடந்த 1991ஆம் ஆண்டு நானும், எனது தந்தையும் ஒரு சமயம் பேசிக் கொண்டிருந்தபோது மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கலாம் என முடிவெடுத்தோம். ரூ.6 லட்சம் வழங்கிய நிலையில் இன்று ரூ.1 கோடி வரை வழங்கி வருகிறோம். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது அதற்கு காரணமானவர்கள் யார் என்று பாருங்கள்.
நாம் நம்மை பற்றி, நமது குடும்பத்தை மட்டும் யோசிக்காமல் நம்மை சுற்றியுள்ள சமூகத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் யோசிக்க வேண்டும். நீங்கள் படித்துவிட்டு வெளியே செல்லும் போது கடினமான நிலை இருக்கும். யாரும் உங்களைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். அடுத்த 20 ஆண்டுகளில் நீங்கள் என்ன பட்டப்படிப்பு படித்தாலும் ஏதாவது ஒரு திறனூக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்” என்றார்.