மிக்ஜாம் புயல் கனமழையால் வேலூர் மாவட்டத்தில் 132.5 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ரூ.22.39 லட்சம் கோரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பரவலான மழை பெய்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க ஏதுவாக பயிர்ச்சேதம் குறித்த ஆய்வை வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் 132.5 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்திருப்பது தெரிய வந்துள்ளன. நெற்பயிர் 130 ஹெக்டேர் அளவுக்கும், பயறு வகைகள் 2 ஹெக்டேர் அளவுக்கும், எண்ணெய் வித்துக்கள் 1.2 ஹெக்டேர் அளவுக்கும் சேதமடைந்துள்ளன.
இதற்கான நிவாரண தொகையாக ரூ.22.39 லட்சம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு அறிக்கை தரப்பட்டுள்ளது. அரசின் நிதியுதவி கிடைத்ததும் விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.