தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் (டிச.27, 28) லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட்டில் தலா 1 செமீ மழை பதிவானது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல் நாளை (டிச.28) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.